சென்னை
மாதவரத்தில் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை பலி
|3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தை பரிதாபமாக இறந்த சம்பவம் மாதவரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சென்னையை அடுத்த மாதவரம் நேரு தெருவில் உள்ள வீட்டின் 3-வது மாடியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ராகுல்(வயது 22). இவர், அங்குள்ள ஒரு குடோனில் மூட்டை தூக்கும் ெதாழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பூஜா. இவர்களுக்கு பரூண்(3) மற்றும் சியோன்(2) என 2 மகன்கள். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர்கள், கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இங்கு வந்து தங்கினர்.
பூஜா தனது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று அங்கு துணி துவைத்து கொண்டு இருந்தார். அருகில் 2 குழந்தைகளும் விளையாடி கொண்டிருந்தனர்.
அப்போது சியோன், மொட்டை மாடியில் உள்ள கைப்பிடி தடுப்பு சுவரில் இரும்பு குழாய்களுக்கு இடையே இருந்த சிறிய இடைவெளி வழியாக 3-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டான். இதில் சியோன், உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தான். தனது கண் எதிரேயே மகன் மாடியில் இருந்து கீேழ விழுந்து பலியானதை கண்டு பூஜா அலறி துடித்தார்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த மாதவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் பலியான குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.