< Back
மாநில செய்திகள்
குழந்தை உயிரிழப்பு- மலைக் கிராமத்தில் சாலை அமைக்க நடவடிக்கை: ஆட்சியர் உறுதி
மாநில செய்திகள்

'குழந்தை உயிரிழப்பு- மலைக் கிராமத்தில் சாலை அமைக்க நடவடிக்கை': ஆட்சியர் உறுதி

தினத்தந்தி
|
29 May 2023 6:54 AM GMT

சாலை வசதி மற்றும் துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.

வேலூர்,

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா, அல்லேரி மலைக் கிராமத்துக்கு உட்பட்ட அத்திமரத்து கொல்லை கிராமத்தி வீட்டின் முன்பு ஒன்றரை வயது குழந்தை தூங்கிக் கொண்டு இருந்த போது அவரை பாம்பு கடித்தது.

சாலை வசதி இல்லாத காரணத்தால் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நீண்ட நேரம் ஆகியுள்ளது. அப்போது விஷம் உடல் முழுவதும் பரவி குழந்தை செல்லும் வழியிலேயே இறந்துவிட்டது.

இதனையடுத்து குழந்தையின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல போதிய வசதி இல்லாமல் பாதி வழியிலேயை ஆம்புலன்ஸில் இருந்து இறக்கி விட்டுள்ளனர் ஊழியர்கள். இதனையடுத்து சிறிது தூரம் இருசக்கர வாகனத்தில் பிள்ளையை எடுத்துச் சென்றுள்ளார்கள் அவர்கள். பின் உடலை கால்நடையாக சுமார் 10 கி.மீ தூரம் மலைப்பகுதிக்கு கையால் தூக்கி சென்றுள்ளனர்.

சாலை வசதி இல்லாததால்தான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே குழந்தை இறந்தது என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இம்மலைகிராமத்தில், மருத்துவ வசதியும் இல்லை. தங்களுக்கு உரிய சாலை வசதியை அரசு ஏற்படுத்தித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில், அல்லேரி மலைக் கிராமத்தில் சாலை வசதி மற்றும் துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உறுதியளித்துள்ளார்.

மேலும் செய்திகள்