சென்னை
குழந்தையை பராமரிப்பதில் தகராறு; இளம்பெண் தற்கொலை
|குழந்தையை பராமரிப்பதில் கணவருடன் ஏற்பட்ட தகராறால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை சேத்துப்பட்டு, அய்யாபிள்ளை தெருவைச் சேர்ந்தவர் அரவிந்த் (வயது 31). தரமணியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (31). இவர், நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
அரவிந்த் மற்றும் ராஜேஸ்வரி 2-வது மாடியிலும், அரவிந்தின் பெற்றோர் முதல் மாடியிலும் வசித்து வருகின்றனர். அரவிந்த்-ராஜேஸ்வரி இருவரும் வேலைக்கு செல்வதால், அவர்களுடைய குழந்தையை அரவிந்தின் பெற்றோர் பார்த்து வந்தனர்.
நேற்று முன்தினம் அரவிந்த் இரவு வேலைக்கு சென்றுவிட்டார். வேலை முடிந்து நேற்று காலை வீட்டுக்கு திரும்பி வந்தார். நீண்டநேரம் கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு மின்விசிறியில் தன்னுடைய மனைவி ராஜேஸ்வரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிசெல்வன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல்கட்ட விசாரணையில், அரவிந்தின் பெற்றோர் திருமணம் ஒன்றுக்கு செல்ல திட்டமிட்டனர்.
இதனால், குழந்தையை யார் பார்த்துக்கொள்வது? என்பதில் அரவிந்துக்கும், ராஜேஸ்வரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த ராஜேஸ்வரி, கணவர் வேலைக்கு சென்ற நேரத்தில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
ராஜேஸ்வரிக்கு திருமணம் ஆகி 4 வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.