கடலூர்
சிறுமி கடத்தல்; போக்சோவில் சிறுவன் கைது
|நெய்வேலி அருகே சிறுமியை கடத்திய சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
நெய்வேலி,
நெய்வேலி அருகே உள்ள ஒரு நகர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் நெய்வேலி பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால், மாயமான மகளை கண்டுபிடித்து தரும்படி நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார், மாயமான சிறுமியை தேடியபோது, அவரை வடக்கு மேலூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்திச் சென்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடத்தப்பட்ட சிறுமியையும், அவரை கடத்திய சிறுவனையும் போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அந்த சிறுமி அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து, சிறுவனை கைது செய்து, சிறுவர் சீர் திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.