முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு
|முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு நேற்று காய்ச்சல் மற்றும் இருமல் அறிகுறி இருந்ததாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் மற்றும் இருமல் அறிகுறி இருந்ததால் நேற்று அவர் மருத்துவமனைக்கு சென்று இருந்தார். இந்த நிலையில், அவருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினின் தனிப்பட்ட மருத்துவரும், மெட்ராஸ் ENT ஆராய்ச்சி மையத்தின் (Madras ENT Research Foundation - MERF) தலைமை மருத்துவருமான மோகன் காமேஸ்வரன் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில், கூறியிருப்பதாவது: "தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று இருமல், காய்ச்சல் அறிகுறிகள் இருந்தன. அதனையடுத்து அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், அவருக்கு வைரல் ஃப்ளூ காய்ச்சல் உறுதியாகியுள்ளது. இதனால், முதல் அமைச்சர் காய்ச்சலுக்கான சிகிச்சைகளை மேற்கொள்ளுமாறும், அடுத்த சில நாட்களுக்கு ஓய்வு எடுக்கும்படியும் அறிவுறுத்தப்படுகிறது" என்று கூறியுள்ளார்.