சென்னை
சென்னை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால் பணிகளை தலைமைச் செயலாளர் ஆய்வு
|சென்னை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தலைமைச் செயலாளர் ஆய்வு
பெருநகர சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலம், வார்டு-156, முகலிவாக்கம், சபரிநகர் மற்றும் மதனந்தபுரம் பகுதிகளில் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் ரூ.99 கோடியே 71 லட்சம் மதிப்பில் பாதாள சாக்கடை பணிகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பருவமழை தொடங்குவதற்கு முன்பு பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், பணிகள் மேற்கொள்ளும் இடங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும், பணிகள் முடிவடையும் பகுதிகளில் உடனுக்குடன் தரமான சாலைகளை அமைக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மழைநீர் வடிகால் பணிகள்
அதன் பின்னர் லலிதாநகர் 2-வது தெருவில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் வெள்ளத் தடுப்பு நிவாரண நிதியின் கீழ் ரூ.3 கோடியே 49 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு, அங்கு பொதுமக்களிடம் கலந்துரையாடினார். இந்த பணிகளை 15 நாட்களுக்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் அறிவுறுத்தினார்.
மேலும் நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள போரூர் ஏரியில் மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட இருக்கும் நடைபாதை, கரைகளை பலப்படுத்துவது போன்ற பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பாதாள சாக்கடை
தொடர்ந்து வளசரவாக்கம் மண்டலத்துக்குட்பட்ட போரூர் சந்திப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை திட்டப் பணிகள், 156-வது வார்டுக்குட்பட்ட போரூரில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் காப்பகத்தில் தன்னார்வ அமைப்பு மூலம் ஆதரவற்ற குழந்தைகள் பராமரிக்கும் பணிகள், ராமாபுரம், திருவள்ளூர் சாலையில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் வெள்ளத்தடுப்பு நிவாரண நிதியின்கீழ் ரூ.20 கோடி மதிப்பில் 2,960 மீட்டர் நீளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, அதிகாரிகளிடம் விரைந்து பணிகளை முடிக்கவும் அறிவுறுத்தினார்.
பூங்கா
மேலும் அடையாறு மண்டலத்துக்குட்பட்ட கோட்டூர்புரம், ரிவர்வியூ சாலையில் தனியார் பங்களிப்புடன் பராமரிக்கப்பட்டு வரும் மாநகராட்சி நகர்வனப் பூங்காவினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள மரக்கன்றுகளை பராமரிக்கவும், கூடுதல் செடிகளை நடவும் வலியுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது, பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் தா.கார்த்திகேயன், இணை ஆணையாளர் (பணிகள்) ஜி.எஸ்.சமீரன், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய செயல் இயக்குனர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், தெற்கு வட்டார துணை ஆணையாளர் எம்.பி.அமித் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.