கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து முதல்-அமைச்சர் மவுனம் காப்பது வேதனை அளிக்கிறது - டிடிவி தினகரன்
|கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து முதல்-அமைச்சர் மவுனம் காப்பது வேதனை அளிப்பதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தஞ்சாவூர்,
தஞ்சையில் இன்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோவையில் நடந்த கார் வெடிப்பில் நல்ல வேளையாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் அதை கொண்டு வந்தவரே பலியாகி இருக்கிறார். ஆனால் இந்த சம்பவம் குறித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை வாய் திறக்கவில்லை. காவல்துறைக்கு தலைவராக இருப்பவரே இப்படி மவுனம் காப்பது தமிழக மக்களுக்கு வேதனையும், வருத்தமும் அளிக்கிறது. இனியாவது தமிழக அரசு பயங்கரவாதிகள் விஷயத்தில் கடுமையான போக்கை கடைப்பிடிக்க வேண்டும்.
எப்போது தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வருகிறதோ அப்போது எல்லாம் பயங்கரவாதம் தலைதூக்க தொடங்குகிறது. அதனால் வாக்கு வங்கி அரசியலை மனதில் கொள்ளாமல் தமிழ்நாட்டின் மக்களின் உயிருக்கும், உடமைக்கும் பொறுப்பேற்று அரசாங்கம் சிறப்பாக செயல்பட வேண்டும்.
கோவை சிலிண்டர் குண்டு வெடிப்பு சம்பவம் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்துகிற விஷயம். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது. போதை கலாச்சாரம் பெருகி கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழ்தான் தாய்மொழி, எந்த மாநிலத்திலும் தாய்மொழிக்குதான் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
எந்த காலத்திலும் தமிழக மக்கள் இந்தி திணிப்பை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். தமிழ்நாட்டில் 1965-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி இந்தி திணிப்பை கொண்டு வந்ததால்தான் இதுவரை ஆட்சி பிடிக்க முடியாமல் போனது. அது போன்ற விபரீத முயற்சியில் பாஜக ஈடுபடாது என நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.