விருதுநகர்
தென் மாநில முதல்-அமைச்சர்கள், எம்.பி.க்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும்
|நாடாளுமன்ற தொகுதி மறுவரைவு குறித்துதென் மாநில முதல்-அமைச்சர்கள், எம்.பி.க்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும்
நாடாளுமன்ற தொகுதி மறுவரைவு குறித்து மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறியதாவது:-
நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழா பல்வேறு விமர்சனங்களுக்கு இடையே நடைபெற்று முடிந்துள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இருக்கை எண்ணிக்கை 888 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 534 உள்ள நிலையில் தமிழகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 39 ஆக உள்ளது. பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் தாங்கள் என்ன நினைக்கிறார்களோ அதை நாடாளுமன்றத்தின் மூலம் நிறைவேற்ற திட்டமிடுகின்றனர். அந்த வகையில் மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதி மறு வரைவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதி மறு வரைவு செய்யப்பட்டால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் வட மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தொகுதி மறு வரைவு, பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்பன உள்ளிட்ட காரணிகளை கூறி தென் மாநில நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். எனவே நாட்டின் முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கும் தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளதால் தென் மாநில முதல்-அமைச்சர்களும், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த முயற்சியை கடுமையாக எதிர்க்க வேண்டும். காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்க்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.