கடலூரில் மழை பாதிப்பு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
|கடலூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.
கடலூர்,
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் கனமழை பெய்து வருகிறது.
இந்த அதீத கனமழையால் மயிலாடுதுறை, கடலூர், பூம்புகார், சீர்காழி ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
கடலூர் மாவட்டம் கீழ்பூவாணிக்குப்பம் பகுதியில் மழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த புகைப்படங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். கனமழை காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்தும், எடுத்து வரும் நடவடிக்கைகள், வெள்ளத்தடுப்பு திட்டங்கள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அதன்பின், மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பார்வையிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
சிதம்பரம், வல்லம் படுகை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டு வருகிறார்.