தமிழகத்தில் பொருளாதாரத்தை பெருக்குவதில் முதல்-அமைச்சர் கவனம் செலுத்தவில்லை: அண்ணாமலை
|தமிழக தொழிலதிபர்கள் மற்ற மாநிலங்களில் தொழில் தொடங்கி வருவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை,
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;
"தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 3.2% ஆக உள்ளது. அதே சமயம், கர்நாடகா 9.9% தெலுங்கானா 3.8%, ராஜஸ்தான் 5.9%, மேற்கு வங்கம் - 4.85, கேரளா - 4.5% பொருளாதார வளர்ச்சியை கொண்டுள்ளது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிக குறைவாகவே உள்ளது.
தமிழ்நாட்டின் வளர்ச்சியில் தேக்கநிலை உருவாகியுள்ளது. ஜி.எஸ்.டி. மூலம் வரும் மாநில வருவாய் மகாராஷ்டிராவிற்கு - 12.4% ஆகவும் உத்தரபிரதேசத்திற்கு 14.6% ஆகவும் உள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு மைனஸ் 11% ஆக உள்ளது. தமிழ்நாட்டின் பொருளாதாரம் சீர்குலைய ஆரம்பித்துள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சி குறைந்து விட்டது.
தமிழக தொழிலதிபர்கள் மற்ற மாநிலங்களில் தொழில் தொடங்கி வருகின்றனர். ஆனால் மாநிலத்தில் பொருளாதாரத்தை பெருக்குவதில் முதலமைச்சர் கவனம் செலுத்தவில்லை.
பெரிய நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொழில் துவங்க சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க வேண்டும். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்க வேண்டும். வங்கதேசத்தில் தொழில் முதலீடு செய்துள்ளவர்களை தமிழகத்திற்கு கொண்டு வந்திருக்க வேண்டும்."
இவ்வாறு அவர் கூறினார்.