< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு பரனூரில் உள்ள மறுவாழ்வு இல்லத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு - குறைகளை கேட்டறிந்து, நல உதவிகளை வழங்கினார்
மாநில செய்திகள்

செங்கல்பட்டு பரனூரில் உள்ள மறுவாழ்வு இல்லத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு - குறைகளை கேட்டறிந்து, நல உதவிகளை வழங்கினார்

தினத்தந்தி
|
27 April 2023 2:21 AM IST

செங்கல்பட்டு பரனூரில் உள்ள மறுவாழ்வு இல்லத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு நடத்தி அங்குள்ளவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். நல உதவிகளையும் வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டம், பரனூரில் தொழுநோயாளர்களுக்கான மறுவாழ்வு இல்லம் 1971-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த அரசு மறுவாழ்வு இல்லத்தில் தற்போது 61 ஆண்கள் மற்றும் 58 பெண்கள் என மொத்தம் 119 நபர்கள் வசித்து வருகின்றனர்.

"கள ஆய்வில் முதல்-அமைச்சர்" திட்டத்தின் கீழ் விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்களை ஆய்வு செய்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் சென்றார். செல்லும் வழியில், செங்கல்பட்டு மாவட்டம், பரனூரில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் அரசு மறுவாழ்வு இல்லத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென்று சென்றார்.

முதல்-அமைச்சரை திடீரென்று பார்த்ததும் மறுவாழ்வு இல்ல நிர்வாகிகள் வேகமாக ஓடி வந்து வரவேற்றனர். அந்த இல்லத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ளவர்களிடம் ஏதாவது குறை இருக்கிறதா, உடல் நிலை நன்றாக இருக்கிறதா என்று கனிவுடன் கேட்டறிந்தார். மேலும் அந்த இல்லத்தில் வசிப்பவர்களிடம் அங்குள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இல்ல வாசிகளுக்கு போர்வைகள் மற்றும் உடைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பரனூர் அரசு மறுவாழ்வு இல்லத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அளித்து வருவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இல்ல வாசிகள், உணவூட்டு செலவினத்தை 42 ரூபாயில் இருந்து 100 ரூபாயாக உயர்த்தியமைக்காக தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டனர். மேலும், 5-வது வார்டில் தண்ணீர் தொட்டி அமைக்கும் பணியினை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும், குப்பை வண்டி வழங்கிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை அவர்கள் வைத்தனர்.

அவர்களது கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவற்றை உடனடியாக நிறைவேற்றிட உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த நிகழ்வின்போது பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்