< Back
மாநில செய்திகள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணம் தோல்வி: டாக்டர் ராமதாஸ் விமர்சனம்
மாநில செய்திகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணம் தோல்வி: டாக்டர் ராமதாஸ் விமர்சனம்

தினத்தந்தி
|
13 Sept 2024 12:56 PM IST

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணம் தோல்வி அடைந்துள்ளதாக டாக்டர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

சென்னை,

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களில் 17 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவினர், 18 நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி ரூ.7,616 கோடி முதலீட்டை ஈர்ப்பதற்கான உடன்பாடுகளில் கையெழுத்திட்டுள்ளனர். ஒப்பீட்டளவில் பார்க்கும்போது இது மிக மிக குறைவு ஆகும்.

தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக தமிழக அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள நிறுவனங்களில் பெரும்பாலானவை ஏற்கனவே தமிழ்நாட்டில் செயல்பட்டு வருபவைதான். உலகில் நான்காம் தலைமுறை தொழில்புரட்சி நடைபெற்று வரும் நிலையில், இத்தகைய ஆய்வு மையங்கள் அமைக்கப்படுவதும், அதற்காக முதலீடு செய்யப்படுவதும் இயல்பாக நடக்கக் கூடியவை. இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தம்மை வருத்திக் கொண்டு அமெரிக்கா சென்றிருக்கத் தேவையில்லை.

தெலுங்கானா, கர்நாடகா, மராட்டியம் போன்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது அமெரிக்காவில் தமிழகம் ஈர்த்த முதலீடுகளின் மதிப்பு மிகவும் குறைவு ஆகும். அந்த வகையில் தமிழக முதல்-அமைச்சரின் அமெரிக்கப் பயணம் தோல்வியடைந்துள்ளது. தமிழ்நாட்டின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக பல்வேறு நாடுகளில் இருந்து தொழில் முதலீடுகள் ஈர்க்கப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கிறது.

அதற்கான சிறந்த வழி தமிழ்நாட்டில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதும், தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சாதகமான சூழலை ஏற்படுத்துவதும் தான். இதை செய்தால் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் தானாக குவியும். எனவே, வீண் விளம்பரங்களை விடுத்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழலை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்