< Back
மாநில செய்திகள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொட்டும் மழையில் உற்சாக வரவேற்பு
வேலூர்
மாநில செய்திகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொட்டும் மழையில் உற்சாக வரவேற்பு

தினத்தந்தி
|
16 Sept 2023 11:51 PM IST

வேலூரில் நடைபெறும் தி.மு.க பவள விழா மற்றும் முப்பெரும் விழாவில் கலந்து கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரெயில் மூலம் காட்பாடிக்கு வந்தார். அவருக்கு கொட்டும் மழையில் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

காட்பாடி

வேலூரில் நடைபெறும் தி.மு.க பவள விழா மற்றும் முப்பெரும் விழாவில் கலந்து கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரெயில் மூலம் காட்பாடிக்கு வந்தார். அவருக்கு கொட்டும் மழையில் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தி.மு.க. முப்பெரும் விழா

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா (செப்.17-ந் தேதி), பேரறிஞர் அண்னா பிறந்தநாள் (செப்.15-ந் தேதி), தி.மு.க. உதயமான ஆண்டு (செப்.17-ந் தேதி) ஆகிய விழாக்களை தி.மு.க. முப்பெரும் விழாவாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கருணாநிதி நூற்றாண்டு விழா, கட்சி பவள விழா ஆண்டில் தி.மு.க. காலடி எடுத்து வைத்துள்ளது. எனவே இந்த ஆண்டு தி.மு.க. முப்பெரும் விழா சிறப்புவாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் தி.மு.க. பவளவிழா மற்றும் முப்பெரும் விழா வேலூரை அடுத்த பள்ளிகொண்டா கந்தனேரியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெறுகிறது.

இதில் கலந்து கொள்ள கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் தனிபெட்டியில் காட்பாடி ரெயில் நிலையத்திற்கு இன்று இரவு 8.40 மணிக்கு வந்தார்.

8.45 மணிக்கு அவர் தனி ரெயில் பெட்டியில் இருந்து இறங்கினார். அப்போது கட்சியின் பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் வேலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. சிறப்பு மாலை அணிவித்து வரவேற்றார்.

மேலும் மாலையில் இருந்தே இடியுடன் மழை பெய்து கொண்டு இருந்தது.

கொட்டும் மழையில் உற்சாக வரவேற்பு

கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்து முதல்-அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

தளபதி வாழ்க, தமிழ்நாடு முதல்-அமைச்சர் வாழ்க என கோஷமிட்டனர். கட்சி நிர்வாகிகள் பொன்னாடை, புத்தகங்கள் வழங்கி வரவேற்பு அளித்தனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆர்.காந்தி, செஞ்சி மஸ்தான், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாநில தலைவர் டி.எம்.கதிர்ஆனந்த் எம்.பி., வேலூர் மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., அமலுவிஜயன் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் முகமதுசகி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் எம்.சுனில்குமார், காட்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.தணிகாசலம் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மின்விளக்கு கட்-அவுட்

ஓடைபிள்ளையார் கோவில் அருகே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவம் பதித்த மின்விளக்கு கட்அவுட் வைக்கப்பட்டிருந்தது.

விருதம்பட்டு பஸ் நிலையத்தில் மாவட்ட பொருளாளர் எல்.நரசிம்மன், காட்பாடி ஒன்றிய கவுன்சிலர் எஸ்.ஞானவேல், மாநகர துணைச் செயலாளர் ஒய்.தேவநேசன், விருதம்பட்டு வட்ட செயலாளர் அரிகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் முதல்-அமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர்.

மேலும் செய்திகள்