< Back
மாநில செய்திகள்
முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டானியாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
மாநில செய்திகள்

முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டானியாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

தினத்தந்தி
|
8 Feb 2023 1:55 PM IST

முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டானியாவை நேரில் சந்தித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

சென்னை,

சென்னை, ஆவடியை அடுத்த மோரை, வீராபுரம் ஸ்ரீவாரி நகரைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ். இவரது மனைவி சவுபாக்யா. இவர்களது 9 வயது மகள் டானியா. 4-ம் வகுப்பு படித்து வருகிறார். எல்லா குழந்தைகளும் போல டானியாவும் 3 வயது வரை இயல்பாக வளர்ந்தார்.

இதற்கிடையே, 3½ வயதுக்கு பின்னர் டானியாவின் முகத்தில் தோன்றிய சிறிய கட்டி அவரது வாழ்க்கையை புரட்டிப்போட்டது. பல்வேறு மருத்துவப் பரிசோதனைக்கு பின்னர் சிறுமி டானியாவுக்கு அரிய வகை முகச்சிதைவு நோய் பாதிப்பு இருப்பது தெரிந்தது. நாட்கள் செல்ல செல்ல டானியாவின் ஒரு பக்க முகம் முழுவதும் சிதையத் தொடங்கியது. இதனால் பள்ளியிலும் டானியாவிடம் மற்ற சிறுமிகள் பாகுபாடு காட்டியதால் அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

மேலும் டானியாவுக்கு அறுவை சிகிச்சை செய்ய போதுமான பண வசதி இல்லை. அவருக்கு அரசு உதவ வேண்டும் என்று பெற்றோர் வேண்டுகோள் விடுத்தனர். இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் சிறுமி டானியாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் சிறுமிக்கு தேவையான சிகிச்சை அளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதனையடுத்து தண்டலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிறுமி டானியாவுக்கு அறுவை சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 23-ம் தேதி சிறுமி டானியாவுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறுமி டானியாவுக்கு சமீபத்தில் 2-வது அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது.

இந்த நிலையில், முகசிதைவு நோயால் பாதிக்கப்பட்டு 2 முறை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் சிறுமி டானியாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். ஆவடியில் உள்ள சிறுமி டானியாவின் இல்லத்துக்கு நேரில் நலம் விசாரித்து சிகிச்சை பிறகு எவ்வாறு இருக்கிறது என கேட்டறிந்தார். அவருடன் அமைச்சர்கள் பொன்முடி மற்றும் நாசர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்