< Back
மாநில செய்திகள்
ரூ.1,274 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாநில செய்திகள்

ரூ.1,274 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தினத்தந்தி
|
13 March 2024 12:05 PM IST

ரூ.1,274 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் தமிழ்நாடு அரசு சார்பில் நடைப்பெற்ற விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த விழாவில் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 25 ஆயிரம் பேருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் ரூ.1,274 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.



4 மாவட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பின் விவரம் பின்வருமாறு:-

நீலகிரி

* உதகமண்டலம் அரசு தாவரவியல் பூங்கா ரூ.3 கோடி மதிப்பீட்டில் உலகத் தரத்துக்கு இணையாக மேம்படுத்தப்படும்.

* 5 அரசு துணை சுகாதார நிலையங்களுக்கு மொத்தம் ரூ.2.50 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.

* தனியார் கட்டிடங்களில் இயங்கும் 10 நியாய விலைக் கடைகளுக்கு ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.

* நீலகிரி மாவட்டத்தில் 2 சமுதாய நலக் கூடங்கள் ரூ.1.32 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

ஈரோடு

* ரூ.20 கோடி மதிப்பீட்டில் சோலார் பகுதியில் காய்கறி மளிகை சந்தை வளாகம் அமைக்கப்படும்.

* ஈரோடு மாநகராட்சி பகுதியில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துடன் காவேரி ஆற்று முகப்பு மேம்படுத்தப்படும்.

* ரூ.20 கோடி மதிப்பீட்டில் சத்தியமங்கலம் நகராட்சியில், குடிநீர் பணிகள் மேற்கொள்ளப்படும்.

* ஈரோடு மாவட்டத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் தொல்லியல் துறை மூலம் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

திருப்பூர்

* பெருமாநல்லூர் சாலையில் உள்ள நல்லாற்றில் ரூ.11.50 கோடி மதிப்பீட்டில் பாலங்கள் கட்டப்படும்.

* திருப்பூர் மாநகராட்சிக்கு ரூ.75 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலக கட்டிடம் அமைக்கப்படும்.

* ரூ.1.36 கோடி மதிப்பீட்டில் கிராம பகுதிகளில் 8 புதிய அங்கன்வாடி மையக்கட்டிடங்கள் கட்டப்படும்.

* ரூ.11.17 கோடி மதிப்பீட்டில் 13 சமுதாய நலக்கூடங்கள் கட்டப்படும்.

கோவை

* தென்னை வேர்வாடல் நோய் பாதிப்பு அதிகமாக இருக்கும் தென்னை மரங்களை வெட்டி அகற்றுவதற்காக ரூ.14.04 கோடி நிதி வழங்கப்படும்.

* ரூ.2.80 கோடி நிதி ஒதுக்கீட்டில் 3 லட்சம் தென்னங்கன்றுகள் உழவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.

* ரூ.10 கோடி மதிப்பீட்டில் கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மழை நீர் வடிகால் மற்றும் கான்கிரீட் சாலை அமைக்கப்படும்.

* உக்கடம் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டு வரும் மேம்பாலத்தில் அகற்றப்பட்ட பேருந்து நிலையம் ரூ.20 கோடி மதிப்பீட்டில் நவீன முறையில் மறு சீரமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்