வெளிநாடு பயணத்தை முடித்துவிட்டு இன்று தமிழகம் வருகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
|வெளிநாடு பயணத்தை முடித்துவிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழகம் வருகிறார்.
சென்னை,
சென்னையில் 2024 ஜனவரியில் உலக முதலீட்டாளா்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் முதலீட்டாளா்களைப் பங்கேற்க அழைப்பு விடுப்பதற்காகவும், தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்காகவும் கடந்த 23-ந்தேதி 9 நாட்கள் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், சுற்றுப்பயணம் சென்றார்.
சிங்கப்பூரில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. நேற்று முன்தினம் ஜப்பானின் டோக்கியோ நகரில் ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு தலைவர் இஷிகுரோ நோரிஹிகோ, செயல் துணைத் தலைவர் கசுயா நகஜோ மற்றும் வர்த்தக அமைப்புடன் உடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். மொத்தம் ரூ.818 கோடியே 90 லட்சம் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
டோக்கியோவில், நேற்று ஜப்பான் நாட்டின் முன்னணி நிறுவனமான ஒம்ரான் ஹேல்த்கேர் நிறுவனம் இந்தியாவில் முதல்முறையாக புதிய தொழிற்சாலையை நிறுவிடும் வகையில், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், ஓம்ரான் ஹேல்த்கேர் நிறுவனத்திற்கும் இடையே, ரூ. 128 கோடி முதலீட்டில் தானியங்கி இரத்த அழுத்த மானிட்டர்களுக்கான உற்பத்தி தொழிற்சாலையை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், 9 நாட்கள் வெளிநாடு பயணத்தை முடித்துக்கொண்டு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) இரவு 10 மணியளவில் தமிழகம் வருகிறார். தமிழகம் வரவுள்ள முதல் அமைச்சருக்கு சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், திமுகவினர் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.