ராமநாதபுரம்
பிற மாநிலங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னுதாரணமாக திகழ்கிறார்-நவாஸ்கனி எம்.பி. பேச்சு
|பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி, பிற மாநிலங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னுதாரணமாக திகழ்கிறார் என்று நவாஸ்கனி எம்.பி. பேசினார்.
சாயல்குடி,
சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி
சாயல்குடி சமுதாய கூடத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை கீழ் செயல்படும் கடலாடி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டத்தின் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் வேலுச்சாமி, சாயல்குடி தி.மு.க. கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் குலாம் முகைதீன், மாவட்ட திட்ட அலுவலர் விசுவாபதி, சாயல்குடி காங்கிரஸ் வட்டார தலைவர் அப்துல் சத்தார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் வெள்ளை பாண்டியன் வரவேற்றார்.
இதில் சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன், துணை தலைவராக மணிமேகலை பாக்கியராஜ், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சரவணன், சாயல்குடி பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் மாணிக்கவேல், அழகர்வேல் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை தொடங்கி வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி பேசியதாவது:-
சேமிப்பு பழக்கம்
தமிழக முதல்-அமைச்சர் பெண்களுக்கு இலவச பஸ் வசதி, பஸ் செல்லாத கிராமங்களுக்கு பெண்கள் பயன் பெறும் வகையில் நகரப்பஸ்களை இயக்கி இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறார். கர்ப்பிணிகளுக்கு அரசு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஏழை எளிய கர்ப்பிணிகள் பயன்பெறும் வகையில் சமூக வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கி அவர்களுக்கு சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி உள்ளார். பெண்களுக்காக தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் சசிகலா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாலா, மாவட்ட திட்ட உதவியாளர் சாலினி, மேற்பார்வையாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கர்ப்பிணிகள் பங்கேற்றனர்.