'முதல்வர் மருந்தகம்' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
|மருந்துகளைக் குறைந்த விலையில் கிடைக்கச் செய்யும் வகையில், இந்த புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை கோட்டையில் இன்று சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை சுதந்திர தினவிழா நிகழ்ச்சிக்காக கோட்டைக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா வரவேற்றார். பின்னர் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார். பின்னர் கோட்டை கொத்தளத்தின் மேல் உள்ள கொடியேற்றும் இடத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று, தேசியக் கொடியை ஏற்றி, மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து, தமிழக மக்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.
அப்போது'முதல்வர் மருந்தகம்' என்ற புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்அறிமுகப்படுத்தினார். பொதுப்பெயர் வகை மருந்துகள் (Generic Medicines) மற்றும் பிற மருந்துகளைக் குறைந்த விலையில் கிடைக்கச் செய்யும் வகையில், 'முதல்வர் மருந்தகம்' என்ற புதிய திட்டத்தை அவர் இன்று அறிமுகம் செய்து வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 1,000 மருந்தகங்கள் திறக்கப்படும். இதைச் சிறப்பாகச் செயல்படுத்திட, மருந்தாளுநர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடன் உதவியோடு, ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.