ரேவந்த் ரெட்டிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!
|தெலுங்கானா முதல்-மந்திரியாக ரேவந்த் ரெட்டி இன்று பதவி ஏற்கிறார்.
சென்னை,
தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றது. மொத்தம் உள்ள 119 சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 64 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. இதையடுத்து அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக ரேவந்த் ரெட்டி தேர்வு செய்யப்பட்டார். கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க ரேவந்த் ரெட்டி உரிமை கோரிய நிலையில், மாநில முதல்-மந்திரியாக இன்று பதவியேற்க உள்ளார்.
தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உள்ள எல்.பி ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 1.04 மணிக்கு பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பதவியேற்பு நிகழ்ச்சியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிலையில், தெலங்கானா முதல்-மந்திரியாக பதவியேற்கவுள்ள ரேவந்த் ரெட்டியை தொலைபேசி வாயிலாக அழைத்து, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில், "தெலுங்கானா முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ள ரேவந்த் ரெட்டிற்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். முதல் மந்திரியாக அவரது பதவிக்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.