ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
|முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு முன்னாள் அமைச்சரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன் காலமானார். அவருக்கு வயது 98. வயது மூப்பு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த ஆர்.எம்.வீரப்பனுக்கு இன்று காலை மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆர்.எம்.வீரப்பன், சிகிச்சை பலனளிக்காமல் இன்று பிற்பகல் உயிரிழந்தார். ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஆர்.எம்.வீரப்பன் மறைவு அரசியல் உலகிற்கு மட்டுமின்றி திரை, இலக்கியம், ஆன்மீகம் உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் பேரிழப்பு என குறிப்பிட்டுள்ளார்.
அரசியல், திரைத்துறை, தமிழ்த்துறை, ஆன்மீகம் என அனைத்து துறைகளிலும் சாதனை படைத்தவர் ஆர்.எம்.வீரப்பன் என்றும், அவர் எம்.ஜி.ஆரின் மனச்சாட்சியாகவும், நிழலாகவும் அரசியலில் வலம் வந்தவர் என்றும் முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆர்.எம்.வீரப்பனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.