முரசொலி செல்வம் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், குடும்பத்தினர் கண்ணீர் அஞ்சலி
|முரசொலி செல்வம் உடல் பெங்களூரில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்டது.
சென்னை,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மருமகனும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வியின் கணவருமான முரசொலி செல்வம் மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 84. பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் முரசொலி செல்வத்தின் உயிர் பிரிந்தது.
திமுகவின் நாளேடான முரசொலியின் நிர்வாக ஆசிரியராக முரசொலி செல்வம் இருந்தார். ஏறக்குறைய 55 ஆண்டுகளுக்கு மேல் முரசொலியில் பணியாற்றி இருக்கிறார். முரசொலியில் சிலந்தி எனும் பகுதியை எழுதி வந்தவர் முரசொலி செல்வம். அவரது மறைவுக்கு ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ம.ஜ.க. தலைவர் தமிமுன் அன்சாரி, விசிக தலைவர் திருமாவளவன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரில் இருந்து அவரது உடல் இன்று பிற்பகல் சென்னை கொண்டு வரப்பட்டது. கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டுவரப்பட்ட முரசொலி செல்வம் உடலைக் கண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணீர் விட்டு அழுதார். தொடர்ந்து துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழக உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.