கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி
|சென்னை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
சென்னை,
மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மேலும் சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை தற்போது ஓய்ந்துள்ள நிலையில், மாநகரில் ஒருசில இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் வடிந்து வருகிறது.
இதனால் சென்னை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்த நிலையில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்பினர் உதவி வருகிறார்கள். இந்த நிலையில் புயல் பாதிப்பு குறித்து கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார்.
இதற்கு முதல்-அமைச்சர் தனது அதிகாரபூர்வ எக்ஸ் சமூகவலைத்தளத்தில் நன்றி கூறி பதிவிட்டுள்ளார். இதில், தங்களது ஆதரவை மிகுந்த மதிப்புடையதாகக் கருதுகிறேன் தோழர் பினராயி விஜயன் அவர்களே. தொடர்பு கொண்டு விசாரித்தமைக்கு நன்றி. சென்னை சீரான வேகத்தில் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. கேரள மக்களின் சார்பாக நீங்கள் வெளிப்படுத்திய உண்மையான அக்கறை எங்களது நெஞ்சங்களுக்கு இதமாக அமைந்துள்ளது. ஒன்றிணைந்து இந்தச் சவாலில் இருந்து மீள்வோம், என்று கூறியுள்ளார்.