< Back
மாநில செய்திகள்
சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
மாநில செய்திகள்

சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தினத்தந்தி
|
12 Jun 2024 1:45 PM IST

ஆந்திர முதல் மந்திரியாக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக இன்று பதவியேற்றார்.

சென்னை,

ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் 175 இடங்களை கொண்ட மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது. இதில் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்ட நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் கீழ் முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா மற்றும் பா.ஜனதா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து களம் கண்டன. கடந்த 4-ந் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் அபார வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் விஜயவாடாவில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டசபை கட்சி தலைவராக (முதல்-மந்திரியாக) சந்திரபாபு நாயுடு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் கவர்னர் அப்துல் நசீரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதைத்தொடர்ந்து, ஆட்சி அமைக்குமாறு சந்திரபாபு நாயுடுவிற்கு ஆந்திர கவர்னர் அழைப்பு விடுத்தார். அதன்படி, ஆந்திர முதல் மந்திரியாக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக இன்று பதவியேற்றுக் கொண்டார். சந்திரபாபு நாயுடுவுக்கு கவர்னர் அப்துல் நசீர் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்த நிலையில் ஆந்திர மாநில முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஆந்திர பிரதேச மாநில முதல்-மந்திரியாக நான்காவது முறையாகப் பொறுப்பேற்றிருக்கும் சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். உங்களது தலைமை ஆந்திரத்துக்கு வளத்தையும், நலத்தையும் கொண்டுவரட்டும். இருமாநில முன்னேற்றத்துக்காக, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு இடையேயான நட்பையும் கூட்டுறவையும் வலுப்படுத்த ஆர்வமுடன் எதிர்நோக்கியுள்ளேன்." என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்