தூத்துக்குடியில் மீனவர் வீட்டில் தேநீர் அருந்திய முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின்
|கனிமொழியை ஆதரித்து முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தூத்துக்குடியில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. தி.மு.க. வேட்பாளராக கனிமொழி எம்.பி. போட்டியிடுகிறார். கடந்த சில நாட்களாக கனிமொழி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கனிமொழியை ஆதரித்து முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து நேற்று தனி விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார்.
இரவில் தூத்துக்குடி சத்யா ஓட்டலில் ஓய்வெடுத்தார். இந்த நிலையில், இன்று காலை முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின், பல்வேறு பகுதிகளில் நடைபயணமாக சென்று வாக்கு சேகரித்தார். அந்த வகையில், தூத்துக்குடி லையன்ஸ் ஸ்டோன் பகுதியில் மக்களிடம் வாக்கு சேகரித்தார். வாக்கு சேகரிப்பின்-போது லயன்ஸ்டோன் பகுதியில் உள்ள சூசை தப்பாஸ் என்ற மீனவர் வீட்டிற்கு சென்ற முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், அவரது வீட்டில் தேநீர் அருந்தினார்.