முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க பயணம் - முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு
|தமிழ்நாட்டுக்கு பல்வேறு முதலீடுகளை ஈர்க்க வரும் 27ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்அமெரிக்கா செல்கிறார்.
சென்னை,
தமிழ்நாட்டுக்கு பல்வேறு முதலீடுகளை ஈர்க்க வரும் 27ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்ல உள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா செல்லும் முதல்-அமைச்சர் கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உள்பட பல்வேறு தொழில் அதிபர்களை சந்திப்பதோடு அமெரிக்கா வாழ் தமிழர்களையும் சந்திக்க திட்டமிட்டு உள்ளார். இதன்படி முதல்-அமைச்சரின் அமெரிக்க பயணத்தின்போது பல முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக தமிழகத்தின் தொழில் வளர்ச்சி குறித்து பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "தெற்காசியாவிலேயே தொழில் புரிவதற்கு உகந்த மாநிலமாகத் தமிழகத்தை உயா்த்துவதே எங்களது அரசின் லட்சியம். தமிழ்நாடு என்பது பண்பாட்டின் முகவரியாக இருந்தது, இருந்து வருகிறது. அத்தகைய தமிழ்நாடு, முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக மாற வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறோம்.
2030ம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலா்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தி கொண்ட பொருளாதாரமாக உருவாக்குவதே எங்களது குறிக்கோள். அந்த இலக்கை நோக்கிப் பயணிக்க அனைவரது ஒத்துழைப்பையும் கோருகிறேன். தொழில்புரட்சி 4.0 மின் வாகனங்கள் உற்பத்தி, சூரிய மின்சக்தி கலன்கள், காற்றாலை கலன்கள், தகவல் தொழில்நுட்பம், தகவல் தரவு மையங்கள், மின்னணு வன்பொருள்கள் உற்பத்தி ஆகிய துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். தொழில்துறைப் புரட்சி 4.0 என்று அழைக்கப்படும் நான்காவது தொழிற்புரட்சி நமது மாநிலத்துக்குக் கிடைத்த அரிய வாய்ப்பாகும்" என்று அவர் கூறியிருந்தார்.