< Back
மாநில செய்திகள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் கள ஆய்வு மேற்கொள்வார்; கே.என்.நேரு பேட்டி
திருச்சி
மாநில செய்திகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் கள ஆய்வு மேற்கொள்வார்; கே.என்.நேரு பேட்டி

தினத்தந்தி
|
18 Jun 2023 1:32 AM IST

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் கள ஆய்வு மேற்கொள்வார் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

பரிசுகள் வழங்கும் விழா

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா திருச்சி கலையரங்கத்தில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி வரவேற்று பேசினார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஆண்டனி ஜோயல் பிரபு திட்ட விளக்க உரையாற்றினார்.

விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற 1,783 விளையாட்டு வீரர்களுக்கு கேடயம், சான்றிதழ்களை வழங்கினார்கள். இதில் எம்.எல்.ஏ.க்கள் சவுந்தரபாண்டியன், கதிரவன், மாநகராட்சி மேயர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் விளையாட்டு விடுதி அலுவலர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.

முதல்-அமைச்சர் கள ஆய்வு

பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி பொறுப்பேற்றபோது முதல் கையெழுத்தாக முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளுக்கு கையெழுத்திட்டார்.

இந்த போட்டியில் திருச்சி மாவட்டத்தில் இருந்து 6 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். அதில் வெற்றி பெற்ற 2 ஆயிரம் மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வின் ஒரு பகுதியாக இன்று(ேநற்று) பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. வருகிற 20-ந் தேதி திருவாரூரில் கலைஞர் கோட்டம் திறப்பு விழா நடைபெறுகிறது. அதன் பின்னர் திருச்சியில் விரைவில் முதல்-அமைச்சர் கள ஆய்வு மேற்கொள்வது தொடர்பாக தேதி தருவார்.

பாதாள சாக்கடை திட்டம்

திருச்சி மாநகராட்சியில் எல்லா இடங்களிலும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இன்னும் 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு மட்டுமே பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. காவிரி புதிய பாலத்துக்கு நிதி அனுமதி கோரி அனுப்பியுள்ளோம். நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்