இயக்குநர் பாரதிராஜாவின் உடல் நலம் விசாரித்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
|மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இயக்குநர் பாரதிராஜாவின் உடல் நலம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
சென்னை,
சமீபத்தில் மதுரைக்குச் சென்ற திரைப்பட இயக்குநா் பாரதிராஜாவுக்கு மயக்கம் ஏற்பட்டதையடுத்து அங்குள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றாா்.
இந்த சூழலில் தீவிர சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனை ஒன்றில் நேற்றுமுன்தினம் அனுமதிக்கப்பட்டாா். இதய பாதிப்புகள் அவருக்கு இருப்பதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவா் மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருகிறாா். இந்த நிலையில் பாரதிராஜாவின் உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள பாரதிராஜாவின் உடல்நிலையை மருத்துவ நிபுணர்கள் கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் என்னை நேரில் காண வரவேண்டாம் என்று என் அன்பு கொண்ட அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். விரைவில் பூரண நலம் பெற்று உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்கிறேன் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நலம் குறித்து அவரது மனைவியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.