அரசியல் சாசன விதிகளுக்குட்பட்டு கவர்னர் செயல்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் வலியுறுத்தினார் - தமிழக அரசு
|முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னரை சந்தித்து நிலுவையிலுள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகளுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வலியுறுத்தினார்.
சென்னை,
சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியதன் அடிப்படையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னரை சந்தித்து நிலுவையிலுள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகளுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வலியுறுத்தினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு கவர்னர், தமிழ்நாடு அரசின் சார்பில் அனுப்பப்பட்ட மசோதாக்கள் மற்றும் கோப்புகளுக்கு நீண்ட காலமாக ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருப்பது தொடர்பாக, தமிழ்நாடு கவர்னருக்கு உரிய அறிவுரைகள் வழங்க வேண்டி தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தது.
அவ்வழக்கில், தமிழ்நாடு கவர்னரிடம் நிலுவையில் உள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகள் தொடர்பாக முதல்-அமைச்சரோடு ஆலோசனை நடத்திட வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியிருந்ததன் அடிப்படையில், கவர்னர், முதல்-அமைச்சருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
கவர்னரின் அழைப்பினையேற்று, தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்று (30.12.2023) கவர்னர் மாளிகையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டத்துறை அமைச்சர் எஸ். இரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் மற்றும் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, ஆகியோருடன் கவர்னரைச் சந்தித்தார்.
கவர்னருடனான இச்சந்திப்பின்போது, பல மாதங்களாக கவர்னரிடம் நிலுவையில் இருக்கும் பல்வேறு கோப்புகளுக்கு விரைந்து ஒப்புதல் அளித்து, அரசுக்கு அனுப்பி வைத்திட வேண்டுமென்று முதல்-அமைச்சர், கவர்னரிடம் வலியுறுத்தினார்.
அதேபோன்று, தமிழ்நாடு சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைத்த 10 முக்கியமான மசோதாக்களை, அரசியல் சாசனத்தில் எங்கும் குறிப்பிடாத வகையில், தேவையின்றி குடியரசுத் தலைவருக்கு கவர்னர் அனுப்பி வைத்துள்ளதைத் திரும்பப் பெற்று, அவற்றிற்கும் விரைந்து ஒப்புதல் அளித்து, அரசுக்கு அனுப்பி வைத்திடவும் கவர்னரை, முதல்-அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
ஊழல் வழக்குகளில் சம்மந்தப்பட்டுள்ள அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கே.சி. வீரமணி மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு தொடர அனுமதி கோரி அனுப்பப்பட்ட கோப்புகளும் பல மாதங்களாக கவர்னர் வசம் நிலுவையில் உள்ளன. அவற்றிற்கும் விரைந்து ஒப்புதல் வழங்க இச்சந்திப்பின்போது வலியுறுத்தப்பட்டது. இதில் கே.சி. வீரமணி தொடர்பான கோப்பினை 15 மாதங்களுக்கு மேலாகவும், எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்பான கோப்பினை 7 மாதங்களுக்கு மேலாகவும் கவர்னர் நிலுவையில் வைத்துள்ளதும் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள உறுப்பினர் பதவிகளுக்கு உறுப்பினர்களை நியமனம் செய்வது தொடர்பான கோப்பும், நீண்ட காலமாக கவர்னரிடம் நிலுவையில் உள்ளது குறித்தும் தெரிவிக்கப்பட்டு அவற்றிற்கு ஒப்புதல் அளித்து திரும்ப அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.
பொதுவாக, அரசியல் சாசன விதிகளுக்குட்பட்டு கவர்னர் செயல்பட வேண்டுமென்றும், அப்போதுதான் மாநில மக்களின் நலனுக்கும், நிருவாகத்திற்கும் பயனளிக்கக்கூடிய வகையில் கவர்னரது செயல்பாடு அமையும் என்றும் முதல்-அமைச்சர், கவர்னரிடம் எடுத்துரைத்தார்.
கவர்னரிடம் நிலுவையில் உள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகள் தொடர்பாக அவர் கோரிய அனைத்து விவரங்களும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் மற்றும் அலுவலர்களால் கவர்னருக்கு நேரிலும், எழுத்துப்பூர்வமாகவும் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ள கருத்துகளை கவர்னர் மனதில்கொண்டு, நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கும், கோப்புகளுக்கும் உரிய காலத்தில் ஒப்புதல் வழங்கிட வேண்டுமென்றும், வருங்காலங்களில் இதுபோன்ற தாமதங்களை கவர்னர் தவிர்த்திட வேண்டுமென்றும் முதல்-அமைச்சர், கவர்னரைக் கேட்டுக் கொண்டார்.
இந்த ஆலோசனையின்போது, அரசின் சார்பாக மேற்படி கருத்துக்களை முதல்-அமைச்சரும், அமைச்சர்களும், தலைமைச் செயலாளரும் விரிவாக எடுத்துக் கூறினர். முதல்-அமைச்சர், கவர்னருக்கு கடிதம் ஒன்றையும் அப்போது வழங்கினார். இக்கடிதத்தில் அரசியல் சாசனத்தின்படி அமைக்கப்பட்டுள்ள அனைத்து உயர் அமைப்புகளின்மீதும் தனக்கு மிக உயர்ந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ள முதல்-அமைச்சர், நிலுவையிலுள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகள் குறித்து தெரிவித்தது, மாநில நிர்வாகம் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி அவற்றிற்கு விரைந்து ஒரு தீர்வு கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில்தான் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.