திருவள்ளூர்
முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்- திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தகவல்
|முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளதாக திருவள்ளூர் கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர்,
விளையாட்டு போட்டிகள்
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தடகளம், நீச்சல், பளுதூக்குதல், பூப்பந்து, கூடைப்பந்து, வலைக்கோல் பந்து, கபடி, கையுந்து பந்து, கால்பந்து மற்றும் டென்னிஸ் போட்டிகள் வருகின்ற 21, 23 மற்றும் 25-ந் தேதி நடைபெற உள்ளது.
தடகளம், கபடி, கால்பந்து போட்டிகள் வரும் 21-ந் தேதி நடைபெற உள்ளது. 22-ந் தேதி வளைக்கோல் பந்து, கையுந்து பந்து, கூடைப்பந்து ஆகியவை நடைபெற உள்ளது. வருகின்ற 23-ந் தேதி பளு தூக்குதல் சென்னை நேரு விளையாட்டு அரங்கத்திலும், டென்னிஸ், நீச்சல் போட்டிகள், சென்னை முகப்பேர் டென்னிஸ் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.
சான்றிதழ்கள் சமர்ப்பிக்க வேண்டும்
இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் ஆண், பெண் ஆகிய இரு பாலரும் 25 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 1-1-1997 அன்றோ அல்லது அதற்கு பின்னர் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். இதற்கான சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மாவட்ட அளவிலான கூடைப்பந்து, வளைக்கோல் பந்து, கபடி, கையுந்து பந்து, கால்பந்து மற்றும் பூப்பந்து இரு பாலருக்கும் ஆகிய குழு விளையாட்டுப் போட்டிகளில் தலைமை அலுவலகத்தால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களை கொண்டு தேர்வு செய்யப்படுபவர்கள் மட்டுமே மாநில அளவிலான போட்டிக்கு கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
குழு போட்டியில் தேர்வு செய்யப்படுபவர்கள் தமிழ்நாட்டில் குறைந்தது 5 வருடங்களாவது வசித்து வருவதற்கான சான்றிதழ் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகலை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
பரிசுத்தொகை
மாவட்ட அளவிலான போட்டியில் ஒருவர் ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பெறும் அணி வீரர்கள், வீராங்கனைகளுக்கு தலா ரூ.1000, ரூ.750 மற்றும் ரூ.500 பரிசுத்தொகையாக வழங்கப்படும்.
இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் நபர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். அதற்கான கடைசி நாள் வருகின்ற 19-ந் தேதியாகும். மேலும் தகவல்களுக்கு 7401703482 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.