கடலூர்
சிதம்பரம் நடராஜர் கோவில் பூட்டு உடைப்பு
|சிதம்பரம் நடராஜர் கோவிலில் பூட்டை உடைத்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம்,
சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தெற்கு கோபுர வாசல் வழியாக உள்ளே செல்லும் வழியில் 2-ம் பிரகாரத்தில் பெரிய கதவு ஒன்று உள்ளது. இந்த கதவு பல ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருந்தது.
இந்த கதவின் 2 பூட்டுகளை நேற்று இரவு வாலிபர் ஒருவர் இரும்பு கம்பியால் உடைத்தார். இந்த சத்தம் கேட்ட பக்தர்கள் மற்றும் தீட்சிதர்கள் அங்கு விரைந்து வந்து, அந்த வாலிபரை பிடிக்க முயன்றனர். உடனே அந்த வாலிபர் தான் வைத்திருந்த இரும்பு கம்பியால் அவர்களை தாக்க முயன்றார்.
வாலிபரிடம் விசாரணை
பின்னர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர், சிதம்பரம் கனகசபை நகர் 9-வது குறுக்கு தெருவை சேர்ந்த 29 வயதுடைய வாலிபர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாலிபரை போலீசார், போலீஸ் நிலையம் அழைத்து சென்று பூட்டை உடைத்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம் நடராஜர் கோவில் பூட்டு உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.