சிதம்பரம் தீட்சிதர் விவகாரம்: பா.ஜ.க. நிர்வாகிக்கு நிபந்தனை முன்ஜாமீன்
|சிதம்பரம் தீட்சிதர் விவகாரம்: பா.ஜ.க. நிர்வாகிக்கு நிபந்தனை முன்ஜாமீன் ஐகோர்ட்டு உத்தரவு.
சென்னை,
பா.ஜ.க. மாநில செயலாளராக இருப்பவர் சூர்யா. இவர், இணையதளம் செய்தி நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த செய்தி நிறுவனம், சிதம்பரம் தீட்சிதர் விவகாரம் குறித்து செய்தி வெளியிட்டது. அதில், சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் பக்தர்கள் வழிபட அனுமதிக்கும் விவகாரத்தில், தீட்சிதர் ஒருவரது பூணூலை அறநிலையத்துறை அதிகாரிகள், போலீஸ்காரர்கள் அறுத்து விட்டதாக கூறப்பட்டிருந்தது.
இந்த செய்தி இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக உள்ளதாக கூறி சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் ஷேக் சிராஜூதீன் என்பவர் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில், சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் சூர்யா மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.சந்திரசேகரன், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் காலையிலும், மாலையிலும் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.