நாமக்கல்
தெருநாய்கள் கடித்து 14 கோழிகள், 3 ஆடுகள் செத்தன
|பரமத்திவேலூரில் தெருநாய்கள் கடித்து 14 கோழிகள், 3 ஆடுகள் செத்தன.
பரமத்திவேலூர்
தெருநாய்கள் கடித்தது
பரமத்தி வேலூரில் இருந்து நாமக்கல் செல்லும் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் பள்ளிக்கு பின்புறம் ராஜசேகர் என்பவர் தேங்காய் குடோனில் 5 ஆட்டுக்குட்டிகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் அந்த பகுதிக்கு வந்த தெருநாய்கள் 3 ஆட்டுக்குட்டிகளை கடித்து குதறி தின்றன. மேலும் ஒரு ஆட்டுக்குட்டியை கடித்து இழுத்து சென்றுள்ளன.
இதுகுறித்து அதன் உரிமையாளர் வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு வந்த வனச்சரக அலுவலர் பெருமாள் தலைமையிலான வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
14 கோழிகள் செத்தன
மேலும் அதே பகுதியில் கதிரேசன் என்பவர் 50-க்கும் மேற்பட்ட உயர் ரக சண்டை கோழிகளை தென்னந்தோப்பு பகுதியில் வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அங்கிருந்த 14 கோழிகளை அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய்கள் கடித்து கொன்றது தெரிய வந்தது. அப்பகுதியிலும் வனத்துறையினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் பரமத்திவேலூர் பகுதியிலும் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருக்குமோ? என்ற அச்சத்தால் பொதுமக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே சிறுத்தைப்புலியின் நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். சிறுத்தைப்புலியை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு முயற்சிகள் செய்து வரும் நிலையில் ஆடு, கோழிகளை கடித்துக்கொள்ளும் தெருநாய்களையும் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.