< Back
மாநில செய்திகள்
10 ரூபாய் நாணயத்துக்கு சிக்கன் பிரியாணி
கடலூர்
மாநில செய்திகள்

10 ரூபாய் நாணயத்துக்கு சிக்கன் பிரியாணி

தினத்தந்தி
|
24 July 2023 12:15 AM IST

திட்டக்குடி அருகே ஓட்டலில் 10 ரூபாய் நாணயத்துக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. இதை பொதுமக்கள் முண்டியடித்து வாங்கி சென்றனர்

ராமநத்தம்

10 ரூபாய் நாணயங்கள்

10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்கிற வதந்தி மக்களிடையே இன்றும் பல இடங்களில் பரவி நிற்கிறது. குறிப்பாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும், 10 ரூபாய் நாணயங்கள் கடலூர், கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இதனால் மக்கள் இந்த நாணயத்தை வாங்குவதற்கே தயக்கம் காட்டுகிறார்கள்.

இந்த வதந்தியை மக்களிடம் இருந்து நீக்குவதற்கு, இந்த நாணயத்தை வெளியிட்ட ரிசர்வ் வங்கி, அரசு மற்றும் சில வணிகர்களும் விழிப்புணர்வு பிரசாரங்களை அவ்வப்போது முன்னெடுத்து வருகிறார்கள்.

இருப்பினும் 10 ரூபாய் நாணயங்கள் கடலூர் மாவட்டத்தில் இன்னும் முழுமையான பயன்பாட்டுக்கு வரவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

சிக்கன் பிரியாணி

இந்த நிலையில், கடலூர் மாவட்ட மக்களிடையே 10 ரூபாய் நாணயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ராமநத்தம் அடுத்துள்ள புதுக்குளத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர், நேற்று புதிதாக திறந்த பிரியாணி கடையில் 10 ரூபாய் நாணயத்துக்கு சிக்கன் பிரியாணி விற்பனை செய்தார்.

இதுபற்றி அறிந்தவுடன், அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தங்களது வீட்டில் இத்தனை நாட்களாக தூங்கி கொண்டு கிடந்த 10 ரூபாய் நாணயங்களை எடுத்துக் கொண்டு பிரியாணி கடையை நோக்கி விரைந்தனர்.

ஒரே நேரத்தில் அங்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்து, பிரியாணியை வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இதுபற்றி அறிந்த ராமநத்தம் போலீசார் அங்கு விரைந்து வந்து, கூட்ட நெரிசலை ஒழுங்குப்படுத்தினர்.

விழிப்புணர்வு

இதுகுறித்து ரமேஷ் கூறுகையில், நான் சென்னையில் பிரபல நட்சத்திர ஓட்டலில் வேலை பார்த்தேன். அங்கிருந்து சொந்த ஊர் வந்த நான், இங்கு புதிதாக பிரியாணி கடையை திறந்தேன்.

தற்போது 10 ரூபாய் நாணயம் ஒரு சில கடைகளில் வாங்க மறுத்துவருவதால், அதுபற்றி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தேன். அதன்படி, கடை திறந்து முதல்நாளான நேற்று, 10 ரூபாய் நாணயத்துக்கு பிரியாணி வழங்கினேன். மக்களும் ஆர்வமுடன் வாங்கி சென்றனர் என்றார்.

மேலும் செய்திகள்