நாமக்கல்
கறிக்கோழி கிலோவுக்கு ரூ.7 உயர்வு
|நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.7 உயர்ந்தது.
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.109-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.7 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.116 ஆக அதிகரித்து உள்ளது.
முட்டைக்கோழி கிலோ ரூ.97-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.3 குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.94 ஆக சரிவடைந்து உள்ளது. முட்டை கொள்முதல் விலை 465 காசுகளாக நீடிக்கிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
கறிக்கோழி விலை உயர்வு குறித்து உற்பத்தியாளர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:-
வழக்கமாக கோடை காலங்களில் கோழிகள் இறையை சரியாக எடுத்துக்கொள்வதில்லை. அதனால் அவற்றின் எடை குறைகிறது. 2.5 கிலோ இருந்த கோழிகள், தற்போது 2 கிலோவாக குறைந்துள்ளது. வாரம் 3 கோடி கிலோ கறிக்கோழி விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது அது 2.50 கோடியாக சரிந்து உள்ளது. கொள்முதல் விலை ரூ.116 என நிர்ணயம் செய்து இருந்தாலும், ரூ.110-க்கு தான் கோழிகளை வியாபாரிகள் பிடிக்கின்றனர். பள்ளி, கல்லூரி விடுமுறை, சுற்றுலா பயணிகள் வரத்து காரணமாக கறிக்கோழி நுகர்வு 10 சதவீதம் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.