< Back
தமிழக செய்திகள்
செட்டிப்பாளையம் கதவணை தண்ணீர் இல்லாமல் வறண்டது
கரூர்
தமிழக செய்திகள்

செட்டிப்பாளையம் கதவணை தண்ணீர் இல்லாமல் வறண்டது

தினத்தந்தி
|
10 July 2022 11:23 PM IST

கரூர் அருகே உள்ள செட்டிப்பாளையம் கதவணை தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது.

அமராவதி ஆறு

கரூர் மாவட்ட மக்களின் விவசாய தேவைகளையும், குடிநீர் தேவைகளையும் அமராவதி ஆறு பூர்த்தி செய்கிறது. பழனி மலைத்தொடருக்கும், ஆனைமலை தொடருக்கும் இடையே உள்ள மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உற்பத்தியாகி சிறு ஓடையாக வந்து இதனுடன் பாம்பாறு, சின்னாறு, தேவாறு, குடகனாறு, உப்பாறு, சண்முகா நதி உள்ளிட்ட பல கிளை ஆறுகள் இணைந்து பெரிய ஆறாக உருவெடுத்து வளம் சேர்க்கிறது அமராவதி ஆறு. திருப்பூர் மாவட்ட மக்களின் தேவைகளையும், கரூர் மாவட்ட மக்களின் தேவைகளையும் ஒருசேர பூர்த்தி செய்யும் அமராவதி ஆறானது கரூர் மாவட்டம், திருமுக்கூடலூர் என்ற இடத்தில் காவிரியில் கலந்து விடுகிறது.

கதவணை

அமராவதி ஆற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வருவதில்லை. வடகிழக்கு பருவமழை காலங்களில் அமராவதி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யும் பட்சத்தில் அமராவதி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்லும். அப்போது கரூர் நோக்கி வரும் தண்ணீர் செட்டிப்பாளையம் பகுதியில் உள்ள கதவணையில் தேக்கி வைத்து, பாசன கால்வாய்களுக்கு தண்ணீர் திருப்பிவிடப்படும். அமராவதி ஆற்றில் அதிகளவு தண்ணீர் வரும் நாட்களில் செட்டிப்பாளையம் கதவணை முழுவதும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, ரம்மியமாக காட்சி அளிக்கும்.

தண்ணீர் இன்றி...

அப்போது கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் செட்டிப்பாளையம் கதவணையை வந்து பார்வையிட்டு செல்வார்கள். ஆனால் தற்போது அமராவதி அணையில் இருந்து மிகக் குறைந்த அளவிலான தண்ணீர் திறந்து விடப்படுவதால் கரூர் செட்டிப்பாளையம் கதவணை வரை தண்ணீர் வருவதற்கு வாய்ப்புகள் குறைந்து உள்ளது. இதனால் செட்டிப்பாளையம் கதவணை தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.

மேலும் செய்திகள்