திண்டுக்கல்
நத்தம் அருகே ஓடும் பஸ்சில் டிரைவருக்கு திடீர் நெஞ்சுவலி
|நத்தம் அருகே ஓடும் பஸ்சில் டிரைவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. பஸ்சை அவர் ஓரமாக நிறுத்தியதால் பயணிகள் உயிர் தப்பினர்.
திண்டுக்கல்லில் இருந்து காரைக்குடிக்கு நேற்று முன்தினம் அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ்சை மதுரையை சேர்ந்த டிரைவர் கிருபாகரன் (வயது 36) என்பவர் ஓட்டினார். நத்தம் அருகே உலுப்பகுடி பஸ் நிறுத்தம் அருகில் பஸ் வந்தபோது, கிருபாகரனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது.
உடனே பஸ்சை சமாளித்து ஓட்டிய அவர், சாலையோரமாக நிறுத்தினார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த பஸ் பயணிகள், டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக உலுப்பக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்ைச அளிக்கப்பட்டு வருகிறது.
ஓடும் பஸ்சில் திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், சுதாரித்துக்கொண்ட கிருபாகரன் பஸ்சை சாலையோரம் நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.