பெரம்பலூர்
பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டி
|பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டி நடந்தது.
4 சுற்றுகளாக...
பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விழாவை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான செஸ் (சதுரங்கம்) போட்டி நேற்று நடந்தது. பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த இந்த போட்டியை உதவி தலைமை ஆசிரியர் சிலம்பரசன் தொடங்கி வைத்தார்.
ஏற்கனவே பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, வேப்பூர் ஆகிய குறு வட்ட அளவில் 14, 17, 19 வயதுகளுக்கு உட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட்ட செஸ் போட்டியில் முதல் 3 இடம் பிடித்தவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டனர். 4 சுற்றுகளாக நடந்த இந்த செஸ் போட்டியில் அவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
மாநில போட்டிக்கு தகுதி
போட்டியை மாவட்ட பள்ளி உடற்கல்வி ஆய்வாளர் விஸ்வநாதன் பார்வையிட்டார். போட்டியில் முதலிடம் பிடித்தவர்களுக்கு தங்க பதக்கமும், 2-ம் இடம் பிடித்தவர்களுக்கு வெள்ளி பதக்கமும், 3-ம் இடம் பிடித்தவர்களுக்கு வெண்கல பதக்கமும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் மாநில அளவிலான செஸ் போட்டியில் விளையாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் ஏற்கனவே குறு வட்ட அளவில் 14, 17, 19 வயதுகளுக்கு உட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்ட டேபிள் டென்னிஸ், இறகுப்பந்து போட்டிகளில் முதலிடம் பிடித்தவர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது.