செங்கல்பட்டு
கொரோனா பரவி வரும் சூழலில் ஓட்டல்களில் தங்கும் செஸ் வீரர்களுக்கு தரமான உணவு வழங்கவேண்டும்
|கொரோனா பரவி வரும் சூழலில் ஓட்டல்களில் தங்கும் செஸ் வீரர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படாத வகையில் தரமான உணவு வழங்கவேண்டும் என்று நட்சத்திர ஓட்டல் நிர்வாகங்களுக்கு தமிழக உணவு பாதுகாப்பு துறை ஆணையர் அறிவுறுத்தினார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளில் 187 நாடுகளை சேர்ந்த 2,500 செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இவர்கள் தங்குவதற்கு மாமல்லபுரம், கோவளம், கேளம்பாக்கம் பகுதிகளிலும் பழைய மாமல்லபுரம் சாலை, இ.சி.ஆர். சாலை போன்ற பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் உள்ள அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. உணவு வசதியும் அந்தந்த ஓட்டல் நிர்வாகங்கள் ஏற்பாடு செய்து வருகின்றன.
இந்தநிலையில் நட்சத்திர ஓட்டல்களில் தங்கும் சர்வதேச செஸ் வீரர்களுக்கு அவர்களின் உடல்நிலை பாதிக்காத வகையில் சுத்தம் சுகாதாரமான, தரமான உணவு பொருட்களை கொள்முதல் செய்து பாதுகாப்பான முறையில் உணவு சமைத்து தருவது சம்பந்தமாக அனைத்து நட்சத்திர ஓட்டல்களின் உணவு கூட மேலாளர்கள், தலைமை சமையல் கலைஞர்கள் ஆகியோரை அழைத்து தமிழக அரசின் உணவு பாதுகாப்பு துறை ஆணையர் லால்வின் தலைமையில் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பரவி வரும் சூழலில் சர்வதேச செஸ் வீரர்கள் தங்கும் நட்சத்திர ஓட்டல்களின் உணவு சமைக்குமிடத்தை எப்போதும் சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும். உணவுக்கு பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் உணவு தரக்கட்டுப்பாட்டு சான்று மற்றும் அங்கீகாரம் உள்ள உணவு பொருட்களையே வாங்கி பயன்படுத்த வேண்டும். சரியான தட்ப வெப்ப நிலையில் இருப்பது போல் சைவ, அசைவ உணவுகளை தனித்தனியாக வைத்திருக்க வேண்டும். சுத்தமான நீரையே உணவு சமைப்பதற்கு பயன்படுத்த வேண்டும்.
ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை மறுமுறை பயன்படுத்த கூடாது போன்ற விதிமுறைகளை அனைத்து நட்சத்திர ஓட்டல்களின் உணவு கூடத்தினர் பின்பற்ற வேண்டும் என்று கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தின் முடிவில் 15 நாட்கள் பயிற்சி பெற்ற நட்சத்திர ஓட்டல்களின் உணவு மேற்பார்வையாளர்களுக்கும், தலைமை சமையல் கலைஞர்களுக்கும் உணவு மேற்பார்வையாளர் சான்றிதழை தமிழக அரசின் உணவு பாதுகாப்பு துறை ஆணையர் லால்வின் வழங்கினார்.
இந்த கூட்டத்தில் காஞ்சீபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா, உணவு பாதுகாப்பு நல அலுவலர் முருகானந்தம், திருக்கழுக்குன்றம் தாசில்தார் சிவசங்கரன், மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி கணேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.