செஸ் ஒலிம்பியாட்: இசிஆர் கடலோர பகுதிகளை தூய்மையாக வைக்க மீனவ கிராமங்களில் பயிற்சி
|செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு இசிஆர் கடலோர பகுதிகளை தூய்மையாக வைக்க மீனவ கிராமங்களில் பயிற்சி கொடுக்கப்பட்டது.
மாமல்லபுரம்,
"செஸ் ஒலிம்பியாட்" போட்டி மாமல்லபுரத்தில் வரும் 28ம் தேதி துவங்குகிறது. இதில் 188 நாடுகளில் இருந்து வீரர்கள் வருகிறார்கள்.
போட்டியை பார்வையிட மத்திய அமைச்சர் மற்றும் வெளிநாட்டு அதிபர்கள் வரலாம் என கூறப்படுகிறது. இதற்காக கோவளத்தில் 2019ல் மோடி தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டல் ரூம்கள் அனைத்தும், அரசு முன் பதிவு செய்து வைத்துள்ளது. அதனால் கோவளம் முதல் மாமல்லபுரம் வரை உள்ள கடலோர பகுதியை தூய்மையாக வைக்க அரசு முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் "தூய்மையான கடல் மற்றும் கடற்கரை பகுதி பிளாஸ்டிக் இல்லாத பெருங்கடல்" என்ற தலைப்பில் கடலோரத்தை தூய்மையாக வைத்திட ஹேன்ட் இன் ஹேன்ட் இந்தியா திடக்கழிவு மேலான்மை திட்டத்தின் மூலம் கிழக்கு கடற்கரை சாலை சோழிங்கநல்லூர் முதல் மாமல்லபுரம் வரையிலான 35 கி.மீ., தூரத்தின் இடையில் உள்ள பனையூர், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், சின்னாடி, கோவளம், பட்டிபுலம், நெம்மேலி, வடநெம்மேலி, திருவிடந்தை, முட்டுக்காடு, கானத்தூர், தேவநேரி, வெண்புருஷம் ஆகிய 13 மீனவ கிராமத்தில் உள்ள 8555 வீடுகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் பங்குதாரர்கள், மாமல்லபுரம் சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் கிராமத்தின் வார்டு உறுப்பினர்களுக்கு மாமல்லபுரத்தில் பயிற்சி கொடுக்கப்பட்டது.