செஸ் ஒலிம்பியாட் போட்டி; திருவண்ணாமலையில் பிரம்மாண்ட கோலம் மூலம் விழிப்புணர்வு
|திருவண்ணாமலையில் பிரம்மாண்ட சதுரங்க கோலம் மூலம் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருவண்ணாமலை,
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, வருகிற 28-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்காக மாமல்லபுரம் பூஞ்சேரியில் சர்வதேச தரத்தில் நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் 55 ஆயிரம் சதுரடியிலும், 22 ஆயிரம் சதுரடியிலும் 2 விசாலமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொள்கின்றனர். ஓபன் பிரிவில் 188 அணிகளும், பெண்கள் பிரிவில் 162 அணிகளும் இடம்பெறுகின்றன. மேலும் இந்தியா சார்பில் விஸ்வநாதன் ஆனந்த், போரிஸ் ஜெல்பாண்ட், ஆர்.பி.ரமேஷ், அபிஜித் குந்தே ஆகியோர் பயிற்சியில்3 அணிகள் களம் இறங்குகின்றன. இதில் 25 வீரர்-வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.
இதனிடையே சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சிகள் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலையில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதனை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சதுரங்க வடிவில் பிரம்மாண்டமான கோலம் வரையப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்வையிட்டுச் செல்கின்றனர்.