செஸ் ஒலிம்பியாட்: அமெரிக்க அணிக்கு அதிர்ச்சி அளித்தது இந்தியா
|செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் பிரிவில் நேற்று நடந்த 8-வது சுற்றில் இந்தியா 2-வது அணி, அமெரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்தது.
சென்னை,
186 நாடுகள் பங்கேற்றுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா தலா 3 அணிகளை களம் இறக்கியுள்ளது.
8-வது சுற்று ஆட்டங்கள் நேற்று நடந்தது. ஓபன் பிரிவில் இந்தியா 1-வது அணி, வலுவான அர்மேனியாவை எதிர்கொண்டது. இதில் இந்தியா 1-வது அணி 1½-2½ என்ற புள்ளி கணக்கில் அர்மேனியாவிடம் வீழ்ந்தது. இந்திய அணியில் விதித் குஜராத்தி, அர்ஜூன் எரிகாசி, நாராயணன் ஆகியோர் தங்கள் ஆட்டங்களில் டிரா கண்டனர்.
மற்றொரு இந்திய வீரர் ஹரிகிருஷ்ணா-அர்மேனியாவின் சர்ஜிசியன் கேப்ரியல் இடையிலான ஆட்டம் நீண்ட நேரம் நீடித்தது. நீயா, நானா என்று இருவரும் மல்லுக்கட்டிய இந்த ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் ஆடிய ஹரிகிருஷ்ணா 102-வது காய் நகர்த்தலில் பணிந்தார். அவரது தோல்வி இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை காலி செய்தது.
மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இந்தியா 2-வது அணி 3-1 என்ற புள்ளி கணக்கில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள அமெரிக்க அணிக்கு அதிர்ச்சி அளித்து வெற்றியை தன்வசப்படுத்தியது. இந்திய வீரர்கள் பிரக்ஞானந்தா, சரின் நிஹல் தங்களது ஆட்டங்களை 'டிரா' செய்தனர்.
கருப்பு நிற காய்களுடன் ஆடிய மற்றொரு இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த 16 வயது டி.குகேஷ் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள பாபியானோ காருனாவை 45-வது காய் நகர்த்தலில் வீழ்த்தி வியக்க வைத்தார். இந்த தொடரில் தொடர்ச்சியாக 8-வது வெற்றியை சுவைத்த குகேஷ் அசைக்க முடியாத வீரராக வலம் வருகிறார்.
அத்துடன் அவரது 'லைவ் ரேட்டிங்'கும் அபாரமாக உயர்ந்து இருக்கிறது. இதேபோல் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய இன்னொரு இந்திய வீரர் சத்வானி ரானக் 45-வது காய் நகர்த்தலில்டொமிங்கஸ் பெரேஸ்சை அடக்கினார்.
இந்தியா 3-வது அணி 1-3 என்ற புள்ளி கணக்கில் பெருவிடம் தோல்வி அடைந்தது. இந்திய அணியில் எஸ்.பி.சேதுராமன், முரளி கார்த்திகேயன் ஆகியோர் தங்கள் ஆட்டங்களில் டிரா கண்டனர். மற்ற இந்திய வீரர்களான சூர்ய சேகர் கங்குலி, அபிஜீத் குப்தா தோல்வியை தழுவினர்.
பெண்கள் பிரிவில் இந்தியா 1-வது அணி பலம் வாய்ந்த உக்ரைனை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 2-2 என்ற புள்ளி கணக்கில் டிராவில் முடிந்தது. இந்திய அணியில் கோனேரு ஹம்பி, ஹரிகா, தானியா சச்தேவ், வைஷாலி ஆகிய 4 பேரின் ஆட்டமும் டிராவில் முடிந்தது.
வெள்ளை நிற காய்களுடன் ஆடிய வைஷாலி 60-வது காய் நகர்த்தல் வரை வெற்றிக்காக போராடினார். ஆனாலும் அதற்குரிய பலன் கிடைக்கவில்லை. முதல் 7 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி கண்டிருந்த இந்தியா 1-வது அணி முதல்முறையாக டிரா செய்துள்ளது.
இந்தியா 2-வது அணி 3½-½ என்ற புள்ளி கணக்கில் குரோஷியாவை பதம் பார்த்தது. இந்திய அணியில் வந்திதா அக்ரவால், பத்மினி ரவுத், திவ்யா தேஷ்முக் வெற்றியை ருசித்தனர். மேரி ஆன் கோம்ஸ்-இவிகோவிச் திஹானா இடையிலான ஆட்டம் 44-வது காய் நகர்த்தலில் டிரா ஆனது.
இந்தியா 3-வது அணி 1-3 என்ற புள்ளி கணக்கில் போலந்திடம் 'சரண்' அடைந்தது.
9-வது சுற்று ஆட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி நடக்கிறது.