தேனி
செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ரங்கோலி
|தேனி பெருந்திட்ட வளாகத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் விழிப்புணர்வு ரங்கோலி வரையும் நிகழ்ச்சியும், மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கான விழிப்புணர்வு செஸ் போட்டியும் நேற்று நடந்தது.
சென்னை மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி வரை 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடக்கின்றன. இதையொட்டி தேனி மாவட்டத்தில் இந்த போட்டிகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தேனி பெருந்திட்ட வளாகத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் விழிப்புணர்வு ரங்கோலி வரையும் நிகழ்ச்சியும், மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கான விழிப்புணர்வு செஸ் போட்டியும் நடந்தது.
இந்த போட்டியை மாவட்ட கலெக்டர் முரளிதரன் தொடங்கி வைத்து அங்கு விதவிதமாக வரையப்பட்டு இருந்த ரங்கோலிகளை பார்வையிட்டார். விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செஸ் போட்டிக்கான காய்களின் உருவம், ஒலிம்பியாட் போட்டிக்கான இலட்சினை மற்றும் தம்பி என்கிற சின்னத்தை ரங்கோலியாக வரைந்து இருந்தனர். அதை பொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர். முன்னதாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.