< Back
மாநில செய்திகள்
மாமல்லபுரத்தி்ல் செஸ் ஒலிம்பியாட் போட்டி: 5 ஏக்கரில் வாகனங்கள் நிறுத்துமிடம்; அதிகாரி ஆய்வு
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

மாமல்லபுரத்தி்ல் செஸ் ஒலிம்பியாட் போட்டி: 5 ஏக்கரில் வாகனங்கள் நிறுத்துமிடம்; அதிகாரி ஆய்வு

தினத்தந்தி
|
16 Jun 2022 10:23 AM IST

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதையொட்டி 5 ஏக்கரில் 2,000 வாகனங்கள் நிறுத்துமிடத்தை செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போக்குவரத்து, மின் வசதி, சுகாதார குழு அதிகாரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வருகிற ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளில் உலகம் முழுவதிலும் இருந்து 186 நாடுகளை சேர்ந்த 2,500 செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த நிலையில் தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போக்குவரத்து, மின் வசதி, சுகாதாரம் குழு அதிகாரி சங்கர் நேற்று போட்டி நடைபொறும் இடத்திற்கு அதிகாரிகளுடன் சென்று பல்வேறு ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு வரும் சர்வதேச செஸ் விளையாட்டு வீரர்கள், பார்வையாளர்கள், முக்கிய பிரமுகர்கள் வரும் வாகனங்கள் நிறுத்துவதற்கான வாகன நிறுத்துமிடம் தேர்வு செய்யப்பட்டது. தனியார் நட்சத்திர ஓட்டல் வளாகத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் 2,000 வாகனங்கள் நிறுத்துவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை அதிகாரி சங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு மேடு பள்ளமாக உள்ள இடத்தை சமன் செய்து அதிக அளவில் வாகனங்கள் நிறுத்துவதற்கு போர்க்கால அடிப்படையில் பணிகளை செய்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

போட்டிக்கு தேவையான மின்சாரம் பெறுவதற்கு மின் கம்பிகள் கொண்டு வருவதற்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக கூடுதல் மின் கம்பங்கள் நடவும் மின் வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. முக்கிய இடங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்த ஆங்காங்கே குடிநீா் தொட்டிகள் அமைக்கவும், தொற்று நோய்கள் பரவாத வகையில் செஸ் போட்டி நடைபெறும் ஓட்டல் வளாக பகுதி முழுவதும் கிருமி நாசினிகள் தெளித்து தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும் பேரூராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஆய்வின் போது திருக்கழுக்குன்றம் தாசில்தார் சிவசங்கரன், மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி கணேஷ், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், மின்வாரிய செங்கல்பட்டு செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் பன்னீர்செல்வம், மாமல்லபுரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வினோத்குமார், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ரகுபதி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்