< Back
மாநில செய்திகள்
செஸ் ஒலிம்பியாட்: சென்னையிலிருந்து மாமல்லபுரத்துக்கு 25-ந்தேதி முதல் 5 இலவச பஸ்கள் இயக்கம்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

செஸ் ஒலிம்பியாட்: சென்னையிலிருந்து மாமல்லபுரத்துக்கு 25-ந்தேதி முதல் 5 இலவச பஸ்கள் இயக்கம்

தினத்தந்தி
|
21 July 2022 1:24 PM IST

செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி சென்னையில் இருந்து மாமல்லபுரத்துக்கு இலவச பஸ்களை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இயக்குகிறது.

சென்னை:

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்ட் 10-ந்தேதி வரை நடக்கிறது. இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற இருப்பது வரலாற்றுக்குரிய நிகழ்வாகும்.

இந்த போட்டியை வெற்றிகரமாக நடத்திட தமிழக அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக மாமல்லபுரம் தயார் நிலையில் இருக்கிறது.

இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி சென்னையில் இருந்து மாமல்லபுரத்துக்கு இலவச பஸ்களை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இயக்குகிறது. வருகிற 25-ந்தேதி முதல் 5 பஸ்கள் மாமல்லபுரத்துக்கு புறப்பட்டு செல்லும். 1 மணி நேரத்துக்கு ஒரு தடவை இலவச பஸ்களின் சேவை இருக்கும். சென்னை மத்திய கைலாஷில் இருந்து இந்த பஸ்கள் இயக்கப்படும். ராஜீவ்காந்தி சாலை வழியாக சோழிங்கநல்லூர் சென்று, அங்கிருந்து ஈ.சி.ஆர். சாலை வழியாக மாமல்லபுரத்துக்கு சென்றடையும்.

இந்த பஸ்கள் எஸ்.ஆர்.பி.ஸ்டூல்ஸ், பி.டி.சி. குவார்டர்ஸ், முட்டுக்காடு உள்ளிட்ட 19 இடங்களில் நின்று செல்லும். இதுகுறித்து சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரி ஒருவர் கூறும்போது, 'செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண பலர் மாமல்லபுரம் வருவார்கள். அவர்களின் வசதிக்காக இலவச பஸ்கள் இயக்கப்படுகிறது. போட்டி முடியும் வரை இந்த பஸ் சேவை இருக்கும்' என்றார்.

மேலும் செய்திகள்