மதுரை
செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு வரவேற்பு
|மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதிக்கு வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 3 அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதிக்கு வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 3 அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
செஸ் ஒலிம்பியாட் ஜோதி
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந் தேதி முதல் அடுத்த மாதம் 10-ந்தேதி வரை பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு தீவிரமாக செய்து வருகிறது.
இந்த போட்டி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்டம் தோறும் பல்வேறு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் கடந்த ஜூன் மாதம் 19-ந் தேதி செஸ் ஒலிம்பியாட் ஜோதியை பிரதமர் மோடி ஏற்றி வைத்தார். அதை தொடர்ந்து ஜோதி ஓட்டம் 40 நாட்களில் பல்வேறு மாநிலங்களில் 75 நகரங்களுக்கு பயணித்து தமிழகம் வந்தடைந்தது.
வரவேற்பு
இந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதியானது கோவையில் இருந்து வாகனம் மூலம் மதுரைக்கு நேற்று கொண்டு வரப்பட்டு, மீனாட்சி அம்மன் கோவில் அம்மன் சன்னதி பகுதிக்கு நேற்று மாலை வந்தடைந்தது.
அமைச்சர்கள் பெரியகருப்பன், பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, மதுரை மாவட்ட கலெக்டர் அனிஸ்சேகர், போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜித்சிங், பூமிநாதன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அந்த ஜோதியை, அமைச்சர்கள் செஸ் கிராண்ட் மாஸ்டர் தீபன் சக்கரவர்த்தியிடம் வழங்கினர். அவர் ஜோதியை பெற்றுக்கொண்டு மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு தெப்பக்குளம் சென்று, அங்கிருந்து ரேஸ்கோர்ஸ் மைதானத்தை சென்றடைந்தனர். ஜோதியை வரவேற்கும் விதமாக கிழக்கு சித்திரை வீதியில் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு, 134 மாணவிகளின் பரதநாட்டிய நடனநிகழ்ச்சி மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மேலும் வழி நெடுகிலும் பொதுமக்களும், விளையாட்டு வீரர்களும் ஜோதியை வரவேற்றனர். ஜோதி சாலைகளில் தடையில்லாமல் செல்வதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்திருந்தனர்.
சர்வதேச வீரர்கள்
ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வரவேற்றனர். அங்கும் ஜோதியை வரவேற்று பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பின்னர் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை மதுரையை சேர்ந்த சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்கள் ரஞ்சித்குமார் (பாரா ஒலிம்பிக் தடகள வீரர்), விகாஸ் (நீச்சல்), கண்ணன், திருஞானதுரை, சோலைமதி (தடகளம்), வர்ஷினி, ஜெர்லின்அர்னிகா (பூப்பந்து), மித்ரா (கேரம்), லோகநாதபாலாஜி (கால்பந்து), கர்ணன் (கபடி), நிகல் (டேபிள்டென்னிஸ்), பவுலின்பிரிஷா (வாலிபால்), முரளி கிருஷ்ணன் (செஸ்) ஆகியோர் பெற்றுக்கொண்டு ரேஸ்கோர்ஸ் மைதானத்தை வலம் வந்தனர். பின்னர் ஜோதி மதுரையில் இருந்து கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்றது.