சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் தனித்தனியாக பிரிந்த சம்பவம் - விசாரணைக்கு உத்தரவு
|சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 16 பெட்டிகள் கழன்று தனித்தனியாக பிரிந்து ஓடியது.
திருவள்ளூர்,
சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு தினந்தோறும் இரவு 10 மணிக்கு சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு சென்றடையும். நேற்று இரவும் வழக்கம்போல் சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. என்ஜினுடன் சேர்த்து மொத்தம் 23 பெட்டிகள் இருந்தன.
இரவு 11 மணியளவில் ரெயில் திருவள்ளூர் ரெயில் நிலையத்தின் 4-வது பிளாட் பாரம் வழியாக சென்றது. அப்போது ரெயிலின் எஸ்.7 மற்றும் எஸ் 8 ஆகிய 2 பெட்டிகளை இணைக்கும் இரும்பு கொக்கி திடீரென பலத்த சத்தத்துடன் உடைந்தது. இதில் எஸ்.8 பெட்டியுடன் இணைந்து இருந்த 16 பெட்டிகள் தனியாக கழன்று ஓடியது.
ரெயில் என்ஜினுடன் சேர்ந்த 7 பெட்டிகள் தனியாக சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் கூச்சலிட்டனர். ரெயிலில் இருந்து பயங்கர சத்தம் கேட்டதை உணர்ந்த என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். இதற்கிடையே தனியாக கழன்று ஓடிய 16 பெட்டிகளும் மெதுவாக 4-வது நடைமேடையில் வந்து நின்றது.
பதட்டம் அடைந்த பயணிகள் அலறியடித்து ரெயிலில் இருந்து இறங்கினர். இதில் இடிபாடுகளில் சிக்கி கீழே விழுந்ததில் சில பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. ரெயிலில் இருந்த பயணிகள் யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு இல்லாததால் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
ரெயில் பெட்டி தனியாக கழன்று ஓடியது தொடர்பாக ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பெரம்பூர் லோகோ பணிமனையில் இருந்து சுமார் 30-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திருவள்ளூருக்கு விரைந்து வந்தனர்.
எஸ்.7-எஸ்.8 பெட்டிகளை இணைக்கும் கொக்கி உடைந்து போனதால் புதிதாக கொக்கி வரவழைக்கப்பட்டது. சுமார் 2 மணி நேரத்துக்கு பின்னர் ரெயில் பெட்டிகள் அனைத்தும் இணைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரவு ஒரு மணியளவில் சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில் திருவள்ளூரில் இருந்து தாமதமாக புறப்பட்டு சென்றது.
ரெயில் பெட்டிகளின் இணைப்பு கொக்கி துண்டானது ஏன்? ஊழியர்கள் சரி பார்த்தனரா? என்று உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், திருவள்ளூரில் சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் தனித்தனியாக பிரிந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு தென்னக ரெயில்வே உத்தரவிட்டுள்ளது. விசாரணைக்கு பிறகு இது குறித்து தெளிவான விளக்கம் அளிக்கப்படும் என்று தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது.
தற்போது இயங்கக்கூடிய ரெயில்களின் இணைப்புகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் நேற்று ஏற்பட்ட சம்பவத்தில் பயணிகளின் பாதுகாப்பிற்கு எந்தவித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை எனவும் தென்னக ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது.