< Back
மாநில செய்திகள்
விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் குஜராத்தில் இருந்து வண்டலூர் பூங்காவுக்கு வரும் 2 சிங்கங்கள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் குஜராத்தில் இருந்து வண்டலூர் பூங்காவுக்கு வரும் 2 சிங்கங்கள்

தினத்தந்தி
|
3 Dec 2022 4:01 AM IST

விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் மூலம் குஜராத் உயிரியல் பூங்காவில் இருந்து 2 சிங்கங்கள் வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்படுகிறது. பதிலுக்கு குஜராத்துக்கு 2 வெள்ளைப்புலிகள் அனுப்பப்படுகின்றன.

வண்டலூர் உயிரியல் பூங்கா

சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயற்கை சூழலில் 1,490 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த பூங்கா ஆசியாவிலேயே மிகவும் பெரியதாகும். இந்த பூங்காவில் 2382 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகிறது. இதனை தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர்.

கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவல் அதிகரித்திருந்த காலகட்டத்தில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அதில் நீலா என்ற 9 வயது உடைய பெண் சிங்கம், பத்மநாபன் என்ற 12 வயது ஆண் சிங்கமும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

அதே ஆண்டில் உடல் நலம் பாதிக்கப்பட்டு கவிதா என்ற பெண் சிங்கம் இறந்தது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டு ஜூன் மாதம் பூங்கா மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்ட மணி என்ற ஆண் சிங்கம், ஜூலை மாதம் புவனா என்கிற விஜி என்ற பெண் சிங்கமும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தன. ஏற்கனவே கடந்த 2017-ம் ஆண்டு மாலா என்ற பெண் சிங்கம் உடல் நலம் குன்றி உயிரிழந்தது.

சிங்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க

தொடர்ந்து பூங்காவில் சிங்கங்கள் உயிரிழந்த காரணத்தால் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த சிங்கங்களின் எண்ணிக்கை குறைந்தது. இதனால் பார்வையாளர்கள் பேட்டரி வேன் மூலம் சிங்கங்களை சென்று பார்க்கும் வசதி கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பூங்காவில் உள்ள சிங்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பார்வையாளர்கள் பேட்டரி வேன் மூலம் சிங்கங்களை சென்று பார்க்கும் வசதியை ஏற்படுத்தவும் பூங்கா நிர்வாகம் மற்றும் உயர் அதிகாரிகள் முடிவு செய்து விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் மூலம் மற்ற மாநிலங்களில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்து சிங்கங்களை பெறுவதற்கு மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்திற்கு வண்டலூர் பூங்கா நிர்வாகம் கடிதம் எழுதி இருந்தது.

3 சிங்கங்கள் வருகை

தற்போது மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் சிங்கங்களை பெறுவதற்கு அனுமதி அளித்துள்ள காரணத்தால் குஜராத் உயிரில் பூங்காவில் இருந்து 2 சிங்கங்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு இந்த மாத இறுதியில் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 2 சிங்கங்களுக்கு பதில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து குஜராத் உயிரியல் பூங்காவுக்கு 2 வெள்ளை புலிகள் அனுப்பி வைக்கப்படுகிறது. இதேபோல லக்னோ உயிரில் பூங்காவில் இருந்து ஒரு பெண் சிங்கம் விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் மூலம் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு மிக விரைவில் கொண்டுவரப்படுகிறது.

இதற்கு பதில் லக்னோ உயிரியல் பூங்காவுக்கு ஒரு வெள்ளைப்புலி அனுப்பி வைக்கப்பட உள்ளது. 3 சிங்கங்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வந்தவுடன் பூங்காவில் உள்ள சிங்கங்களின் எண்ணிக்கை 11- ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்