< Back
மாநில செய்திகள்
தென்னிந்தியாவின் முதல் பல்கலைக்கழகமான சென்னைப் பல்கலைக்கழகத்தை நிதி நெருக்கடியில் இருந்து பாதுகாக்க வேண்டும் - டி.டி.வி.தினகரன்
மாநில செய்திகள்

தென்னிந்தியாவின் முதல் பல்கலைக்கழகமான சென்னைப் பல்கலைக்கழகத்தை நிதி நெருக்கடியில் இருந்து பாதுகாக்க வேண்டும் - டி.டி.வி.தினகரன்

தினத்தந்தி
|
24 Feb 2024 2:48 PM IST

சென்னைப் பல்கலைக்கழகம் தொடர்ந்து இயங்குவதற்கான நடவடிக்கைகளை உயர்கல்வித்துறையும், தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும்.

சென்னை,

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

தென்னிந்தியாவின் முதல் பல்கலைக்கழகமான சென்னைப் பல்கலைக்கழகத்தை நிதி நெருக்கடியில் இருந்து பாதுகாக்க வேண்டும் - மாணவர்களின் நலன் கருதி நிர்வாக குளறுபடிகளைச் சீர்செய்து தமிழக அரசின் நிதி மூலமாகவே பல்கலைக்கழகம் இயங்குவதை உறுதிசெய்ய வேண்டும்.

சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசின் நிதி ஒதுக்கீடு 50 சதவிகிதத்திற்கு மேல் இல்லை என்பதால் வருமானவரித்துறை தனது சட்டத்தின் படி அப்பல்கலைக்கழகத்தை தனியார் பல்கலைக்கழகமாகக் கருதி வரி விதித்திருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் நியமனங்கள் மற்றும் பதவி உயர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறி தமிழக அரசு வழங்கும் நிதியை ஏற்கனவே பெருமளவு குறைத்திருக்கும் நிலையில், தற்போது பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கி வைத்திருப்பதால் நிர்வாக செயல்பாடுகள் மட்டுமல்லாது அனைத்து தரப்பு ஊழியர்களும் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

கடந்த 6 மாதங்களாக துணைவேந்தர் இல்லாமல் இயங்கும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் துறைசார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கும், ஊழியர்களுக்கு ஊதியம் தருவதற்கும் நிதியில்லாத நிலையில் வருமான வரியை எப்படி செலுத்த முடியும் என்ற கேள்வியை மாணவர்களும், பேராசிரியர்களும் எழுப்பியுள்ளனர்.

உலகப்புகழ் பெற்ற அறிவியல் அறிஞர்களையும், நாடு போற்றும் சாதனையாளர்களையும் உருவாக்கிய 150 ஆண்டுகளை கடந்த சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு ஏற்பட்டுள்ள நிதிச் சிக்கல் தொடருமேயானால் பல்கலைக்கழகம் தனியார் வசம் செல்வதற்கான அபாயமும் ஏற்படும் என கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

எனவே, சமூகநீதி அடிப்படையில் அனைவருக்கும் சமமான உயர்கல்வியை வழங்கி வரும் சென்னைப் பல்கலைக்கழகத்தை வருமான வரித்துறை விவகாரத்திலிருந்து பாதுகாத்து மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசின் பொதுநிதியிலேயே சென்னைப் பல்கலைக்கழகம் தொடர்ந்து இயங்குவதற்கான நடவடிக்கைகளை உயர்கல்வித்துறையும், தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்