தேனி
பெரியகுளத்தில் நடந்த கூடைப்பந்து போட்டியில் சென்னை அணி முதலிடம்
|பெரியகுளத்தில் நடந்த அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியில் சென்னை அணி முதலிடம் பிடித்தது.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளத்தில், பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 61-வது ஆண்டு அகில இந்திய கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. கடந்த 15-ந்தேதி தொடங்கிய இந்த போட்டி நாக்-அவுட் மற்றும் லீக் சுற்று அடிப்படையில் கடந்த ஒருவாரமாக நடைபெற்று வந்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை இறுதி லீக் சுற்று போட்டி நடைபெற்றது. இதில், அதிக புள்ளிகளை பெற்று சென்னை விளையாட்டு விடுதி அணி முதலிடம் பிடித்தது. 2-ம் இடத்தை டேராடூன் ஓ.என்.ஜி.சி. அணியும், 3-ம் இடத்தை புதுடெல்லி இந்திய விமானப்படை அணியும், 4-ம் இடத்தை பெங்களூரு பரோடா வங்கி அணியும் பிடித்தது.
இதையடுத்து வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கினார். இந்திய கூடைப்பந்து வீராங்கனை அனிதா பால்துரை முன்னிலை வகித்தார். பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் சிதம்பர சூரியவேலு வரவேற்றார். இதில் அமைச்சர் இ.பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
முதலிடம் பிடித்த சென்னை விளையாட்டு விடுதி அணிக்கு சிதம்பரசூரிய நாராயணன் நினைவு சுழற்கோப்பையும், ரூ.50 ஆயிரம் பரிசு தொகையும் வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் சிறந்த வீரருக்கான பரிசை சென்னை விளையாட்டு விடுதி அணியை சேர்ந்த கார்த்திக் பெற்றுக்கொண்டார். முடிவில் பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் பொருளாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.