'நல்ல அதிகாரிகளின் செயல்பாட்டால் சென்னை தப்பியது' - டி.டி.வி. தினகரன்
|இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட பேரிடரை மக்கள் திறமையாக எதிர்கொண்டிருக்கிறார்கள் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
சென்னை,
மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மேலும் சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்றவும், வெள்ளத்தில் சிக்கிய மக்களை படகுகள் மூலம் மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நல்ல அதிகாரிகளைக் கொண்டு அரசு சரியாக செயல்பட்டுள்ளதாக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட இந்த பேரிடரை சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்ட மக்கள் திறமையாக எதிர்கொண்டிருக்கிறார்கள். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசு மக்களை மூழ்கடித்து விடுவார்களோ என்று பயந்தேன்.
நல்லவேளையாக மக்கள் எல்லாம் காப்பாற்றப்பட்டுள்ளனர். நல்ல அதிகாரிகளின் செயல்பாட்டால் சென்னை தப்பியது என்றே சொல்ல வேண்டும். தொடர்ந்து நல்ல முறையில் செயல்பட்டு விரைவில் இந்த பேரிடரில் இருந்து சென்னை மக்கள் சகஜ நிலைக்கு திரும்ப அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும்."
இவ்வாறு டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.